அகமதாபாத்: ஐபிஎல் என்றாலே அனல் பறக்கும் சிக்ஸர்கள்... மின்னல் வேக பந்துவீச்சு... கூடவே ரசிகர்களின் விசில் சத்தத்துடன் கூடிய ஆரவாரம் என எப்போதும் களைகட்டும். அந்த வகையில், 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 31) அகமதாபாத்தில் தொடங்குகிறது. மே 28ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் சென்னை, மும்பை, குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சாதிக்குமா சென்னை?: கடந்த ஆண்டு, முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்த சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த நிலையை மாற்றி, இந்தாண்டு வெற்றிப் பாதைக்கு அந்த அணி திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கேப்டன் தோனி ரன் சேர்க்க கூட வேண்டாம்; அவர் களத்துக்குள் வந்தால் மட்டும்போதும் என்பது அவரது தீவிர ரசிகர்களின் விருப்பம். அணியை அவர் வழிநடத்தினால் மட்டுமே போதும் என சொல்லும் ரசிகர்களும் உண்டு. அந்தளவுக்கு தோனியின் கேப்டன் ஷிப் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
41 வயதான கேப்டன் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தொடரில் அவரது தாக்கம் என்னவாக இருக்கும் என்பது ரசிகர் கூட்டத்தின் பெரும் எதிர்பார்ப்பு. சென்னை அணியைப் பொறுத்தவரை கான்வே, கெய்க்வாட், அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். கூடவே கேப்டன் தோனி ஹெலிகாப்டர் ஷாட்களை பறக்கவிட்டால் கணிசமான ரன்களை குவிக்கலாம். பந்துவீச்சைப் பொறுத்தவரை சான்ட்னெர், ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளனர்.
இளம் பட்டாளம்: குஜராத் அணியைப் பொறுத்தவரை, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோனிக்கு மிகவும் நெருக்கமானவர். தோனியின் ஆலோசனைகளை கேட்டு விளையாடி வரும் அவர், தற்போது அவருக்கு எதிராக முதல் ஆட்டத்தில் களம் இறங்குகிறார். சுப்மன் கில், கேன் வில்லியம்சன், ராகுல் திவேதியா, மேத்யூ வேட் என பெரிய பேட்டிங் பட்டாளத்தை கொண்டுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் உத்வேகத்துடன் அந்த அணி களம் இறங்கும்.
சாதனை படைப்பாரா தோனி?: இதுவரை 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியின் கேப்டன் தோனி, 4,978 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 22 ரன்கள் சேர்த்தால் அவர் 5,000 ரன்களை எட்டுவார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 5,000 ரன்களை குவித்த 7ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இதையும் படிங்க: TATA IPL 2023: எந்த தேதியில், எந்த அணி களம் காணும்.. முழு அட்டவணை..