கொல்கத்தா : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா சன்ரைசஸ் ஐதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
ஆரம்பமே ஐதரபாத் அணிக்கு சறுக்கலாக அமைந்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் தலா 9 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹேரி ப்ரூக் மற்றும் கேப்டன் ஏய்டன் மார்க்ரம் மட்டையை சுழற்றி அணியின் ரன் விகிதத்தை கணிசமாக உயர்த்தினர்.
நிலைத்து நின்று ஆடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடியாக ஆடிய கேப்டன் மார்க்ராம் 5 சிக்சர் 2 பவுண்டரி என அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடக்க வீரர் ஹேரி ப்ரூக் அட்டகாசமான ஷாட்டுகளை அடித்து சீரான வேகத்தில் ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிரடியாக விளையாடிய ஹேரி ப்ரூக் 3 சிக்சர், 12 பவுண்டரிகள் என விளாசி சதம் அடித்தார். நடப்பு சீசனில் அறிமுகமான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹேரி ப்ரூக், தொடக்க சீசனிலே சதம் அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார். 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.
229 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டம் அந்த அணிக்கு சரியாக அமையவில்லை. ரன் கணக்கை தொடங்கும் முன்பே அந்த அணி விக்கெட் கணக்கை தொடங்கியது. விக்கெட் கீப்பர் ரஹமானுல்லா குர்பாஸ் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஜெகதீஷன் 36 ரன், வெங்கடேஷ் ஐயர் 10 ரன், ரசல் 3 ரன், சுனில் நரேன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகினர். மறுமுனையில் கேப்டன் நிதிஷ் ரானா மட்டும் அணியை காப்பாற்ற போராடிக் கொண்டு இருந்தார். அரை சதம் கடந்து விளையாடிக் கொண்டு இருந்த அவருக்கு ரிங்கு சிங் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன் குவிப்பில் தீவிரம் காட்டினர். இதனிடையே 6 சிக்சர் 5 பவுண்டரி என விளாசி நல்ல நிலையில் இருந்த கேப்டன் நிதிஷ் ராணா, நடராஜன் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் ஆட்டம் மீண்டும் ஐதரபாத் பக்கம் செல்லத் தொடங்கியது.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணியில் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தலா 4 பவுண்டரி, சிக்சருடன் ரிங்கு சிங் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் மேக்ரோ ஜான்சன், மயங்க் மார்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நடராஜன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சதம் விளாசிய ஹேரி ப்ரூக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்தை பிடித்தது.
இதையும் படிங்க : திராவிடக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது - முதலமைச்சர்