டெல்லி: ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பிளே ஆப் சுற்று நெருங்கியதால் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிப்பதற்கு அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இது வரை எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாததும், புள்ளிப்பட்டியலில் தினசரி ஏற்படும் திடுக் மாற்றங்களாலும் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களை சீட் நுனியில் வைத்திருக்கின்றன.
இந்நிலையில் நேற்று டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனை அடுத்து பஞ்சாப் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர்.
பஞ்சாப் அணியின் கேப்டன் தவான் 5 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 7 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களம்கண்ட லிவிங்ஸ்டன் 4 ரன், ஜிதேஷ் ஷர்மா 5 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். சாம் கரன் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி24 பந்துகளில் 20 ரன் எடுத்தநிலையில் பிரவின் டூபே வீசிய பந்தில் ஹக்கிம் கானிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் மறுமுனையில் நிலைத்து நின்ற பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 65 பந்துகளில் 103 ரன் எடுத்த நிலையில் முகேஷ்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கியவர்களும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்த நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 168 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். பிலிப் சால்ட் 17 பந்துகளில் 21 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்துக் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன் மட்டுமே எடுத்த நிலையில் நடையைக் கட்டினர்.
மறுமுனையில் பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் டேவிட் வார்னர் 27 பந்துகளில் 54 ரன் சேர்த்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் ஹக்கிம் கான் (16 ரன்) மற்றும் பிரவின் டூபே (16 ரன்கள்) ஓரளவு ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணியால் 136 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது.
பஞ்சாப் அணியில் சிறப்பாகப் பந்துவீசிய ஹர்பீரித் பிரார் 4 விக்கெட்டுகளும், நாதன் எல்லீஸ் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: LSG vs SRH: மான்கட், பூரன் அதிரடி - லக்னோ அணி அபார வெற்றி!