ஐதராபாத்: 10 அணிகள் மோதிக்கொள்ளும் ஐபிஎல்-16 வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத் ராஜீவ்காந்தி இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 25ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் முதலில் பந்தி வீசுவதாக அறிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேடன் ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்ட கேப்டன் ரோஹித் சர்மா 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தநிலையில் நடராஜன் வீசிய பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 31 பந்துகளில் 38 ரன்கள் சேகரித்து மார்கோ ஜான்சென் வீசிய பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் சூர்ய குமார் யாதவ் 3 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மார்கோ ஜான்சென் வீசிய பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய தூண்களாக இஷான் கிஷன், சூர்ய குமார் யாதவ் ஆகிய இருவர் விக்கெட்டையும் மார்கோ ஜான்சென் ஒரே ஓவரில் காலி செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
அடுத்து களமிறங்கிய திலக் வர்மா அடித்து ஆடி அணிக்கு துரிதமாக ரன்கள் சேகரித்து கொடுத்தார். அவரும் 17 பந்துகளில் 37 ரன்கள் சேகரித்தநிலையில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிட் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகாமல் இருந்தார். நிலைத்து நின்று ஆடிய கேமரூன் கிரீன் அரை சதத்தால் அணி 192 என்ற இலக்கை எட்டியது. கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
அடுத்து 193 என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஹேரி புரூக், மயங்க் அகர்வால் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த ஹேரி புரூக் இந்த ஆட்டத்தில் சோபிக்காமல் 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் வீசிய பந்தில் சூர்ய குமார் யாதவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் பந்தில் இஷானிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஐதராபாத் அணிக்கு அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில், கேப்டன் எய்டன் மார்க்ரம் 17 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து அவுட் ஆகி வெளியேறினார். ஹென்ரிச் கிளாசன் 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தநிலையில் வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.
அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய கடைசி ஓவரில் ஐதராபாத் அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் 10 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மயங்க் மார்கண்டே 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது.