மொஹாலி: ஐபிஎல் 2023 போட்டியின் 18வது ஆட்டம் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற்றது. மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஐஎஸ் பிந்த்ரா அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவானும், பிரப்சிம்ரன் சிங்கும் களமிறங்கினர். பிரப்சிம்ரன் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் ஷிகர் தவானும் 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணிக்கு நல்ல துவக்கம் அமையவில்லை.
அடுத்து களமிறங்கிய வீரர்களின் பொறுப்பான பங்களிப்பு காரணமாக பஞ்சாப் அணி 153 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மாத்தீவ் ஷார்ட் 36, ஜித்தேஷ் ஷர்மா 25, ஷாருக் கான் 22, சாம் கரண் 22 ரன்களை எடுத்தனர். அதேநேரம் பந்துவீச்சில் குஜராத் அணியில் மோஹித் ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், ஷமி, ஜோசுவா லிட்டில், அல்சாரி ஜோசப் மற்றும் ரஷித் கான் ஆகிய வீரர்கள் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஜோடி களம் இறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விருதிமான் சஹா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் 20 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்த நிலையில் பிரப்சிம்ரனிடம் கேட்ச் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்களுடனும் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி ஒவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சுப்மன் கில் 67 (49) ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய தேவாட்டியா தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தை பவுண்ட்ரிக்கு விரட்டி 19.5 ஓவரில் அணியின் வெற்றிக்கான ரன்னை சேர்த்தர். தேவாட்டியா 2 பந்துகளில் 5 ரன்களுடனும், டேவிட் மில்லர் 18 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இறுதியில் 19.5 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: PBKS Vs GT: எங்க ஏரியா உள்ள வராத..! - சொந்த மண்ணில் குஜராத்துடன் மல்லுக்கட்டும் பஞ்சாப்!