கரோனா நெருக்கடிக்கு மத்தியில், ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், கேகேஆர் அணியின் இரண்டு வீரர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து, ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பல வீரர்களுக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால், ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. வெளிநாட்டு வீரர்கள், பாதுகாப்பாக சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்திட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால், இந்திய அணிக்கு செப்டம்பர் 14ஆம் தேதி வரை டெஸ்ட் தொடர் உள்ளதாலும், அக்டோபர் இறுதியில் டி20 உலகக் கோப்பை தொடங்கிவிடும் என்பதாலும், இடைப்பட்ட காலமான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் செப்டம்பர் 14இல், மான்செஸ்டர் நகரில் முடிவடைகிறது. உடனடியாக அடுத்த நாளே, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்திய வீரர்கள் அழைத்துச் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.