மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணிக்கு விராட் கோலியும், பஞ்சாப் அணிக்கு 'சுட்டிக்குழந்தை' சாம் கரனும் கேப்டனாக செயல்பட்டனர். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், டுபிளெஸ்ஸியும் களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். கோலி 59 ரன்களில் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டுபிளெஸ்ஸி 84 ரன்களைக் குவித்து வெளியேறினார். மேக்ஸ்வெல் 0, தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது.
லோம்ரோர் 7, சபாஸ் அகமது 5 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை ஹர்ப்ரீத் பிரார் 2, அர்ஷ்தீப் சிங், எல்லீஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 175 ரன்கள் வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி ஆட்டத்தை தொடங்கியது. தைடே 4, மேத்யூ ஷார்ட் 8, லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும், மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடினார். அவர் 30 பந்துகளில் 46 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து பின்னால் வந்த வீரர்கள் ரன் சேர்க்கத் தடுமாறினர். ஜிதேஷ் சர்மா 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஹர்ப்ரீத் சிங் 13, சாம்கரன் 10, ஷாருக்கான் 7, ஹர்ப்ரீத் பிரார் 13, எல்லீஸ் 1 ரன்களில் பெவிலியன் திரும்பினர். 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பஞ்சாப் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை சிராஜ் 4 விக்கெட்களை சாய்த்தார். ஹசரங்கா 2, பர்னல், ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது சிராஜூக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: RCB vs PBKS: பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!