ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நடந்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி, இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்குகிறது. ஆனால் அதேநேரம், கடந்த 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ள சன்ரைசர்ஸ் அணி, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பேட்டிங் சொதப்பல்: சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, இன்னும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் அன்மோல்ப்ரீத் சிங் ஓரளவுக்கு ரன்களை குவித்தாலும், மயங்க் அகர்வால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார். கேப்டன் மார்க்ரம் கடந்த ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது ரசிகர்களை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. நடுவரிசையில் களம் இறங்கும் ஹேரி ப்ரூக், அப்துல் சமத் ஆகியோரும் நிலைமையை உணர்ந்து, விளையாடினால் தான் ரன்களை குவிக்க முடியும். ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி ப்ரூக், கடந்த இரண்டு ஆட்டங்களில் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷித், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், தமிழ்நாட்டு வீரர் நடராஜன் ஆகியோர் முழுத் திறமையை வெளிப்படுத்தினால், பஞ்சாப் அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். சொந்த மண்ணில் விளையாடுவது ஹைதராபாத் அணிக்கு பலமாக இருந்தாலும், ஒட்டுமொத்த அணியும் முழு பங்களிப்பை அளித்தால் மட்டுமே, பஞ்சாப் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ள சன்ரைசர்ஸ் அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக போராடும் என்பதை மறுப்பதற்கில்லை.
மிரட்டும் பஞ்சாப்: சன்ரைசர்ஸ் அணியை ஒப்பிடும் போது பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை பலமாகவே உள்ளது. அந்த அணி விளையாடிய கடைசி இரண்டு ஆட்டங்களிலும் கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், பனுகா ராஜபக்சே ஆகியோர் போதிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். பிற வீரர்களும் கணிசமான ரன்களை குவித்தால், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.
பந்துவீச்சை பொறுத்தவரை சாம் கரன், அர்ஷ்தீப் சிங் நம்பிக்கை அளிக்கின்றனர். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதேபோல் நாதன் எல்லீஸூம் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், அவர் 4 விக்கெட்களை எடுத்தார்.
ரபாடா வருகை; லிவிங்ஸ்டோன் தாமதம்: பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் காயம் காரணமாக இன்னும் அணியில் இணையவில்லை. ஆல்ரவுண்டரான அவர், உடல் தகுதியை நிரூபித்த பின், அடுத்த வாரம் அணியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே வேளையில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இன்று பஞ்சாப் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடும் லெவனில் ரபாடா இடம்பெற்றால், எல்லீஸூக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் புள்ளி பட்டியலில் முன்னேற்றத்தை தரும் என்பதால், விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 20 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் சன்ரைசர்ஸ் 13 போட்டிகளிலும், பஞ்சாப் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி எங்கே?: இரு அணிகளும் மோதும் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் தொடங்குகிறது.
சன்ரைசர்ஸ் உத்தேச அணி: அன்மோல்ப்ரீத் சிங் (விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), ஹேரி ப்ரூக், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷீத், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன்.
பஞ்சாப் உத்தேச அணி: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), பனுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராசா, சாம் கரன், ஷாருக்கான், நேதன் எல்லீஸ், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.