அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், குஜராத் அணி வீரர் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் அவர் விளாசிய 129 ரன்கள் மூலம் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இது நடப்பு சீசனில் சுப்மன் கில்லுக்கு 3வது சதம் ஆகும். கடந்த 4 போட்டிகளில் 3 சதங்களை விளாசி, ரசிகர்களை கவர்ந்துள்ளார் சுப்மன் கில். அவரது ஆட்டத்தை சக வீரர்களும், முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
மும்பைக்கு எதிரான போட்டி முடிவடைந்த பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, "டி20 போட்டிகளில் சதம் அடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ள சுப்மன் கில்லுக்கு, 100 ரன்கள் என்பது டிபன் சாப்பிடுவது போன்றது. நான் டி20 ஆட்டங்களில் 100 ரன்கள் அடிக்கப்படுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்தவைகளில் இது மிகவும் சிறந்து ஒன்று. எப்போதுமே அவர் 60 பந்துகளுக்கு 55 ரன்களை எடுப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த முறை சிறப்பாக விளையாடி சதம் விளாசியிருக்கிறார். அதை எண்ணி பெருமைப்படுகிறேன்.
அதிகளவில் பேட்டிங் செய்வதால் சில நேரங்களில் கில்லுக்கு ஓய்வு அளிக்கும் நேரம் வரும். அவரது பேட்டிங்கை பார்த்து பயந்துவிட்டேன். ஒவ்வொரு வெற்றிக்கும் அவர் தகுதியானவர். ஐபிஎல் மட்டுமின்றி இந்திய அணிக்கும், கில் ஒரு மிகச்சிறந்த வீரராக இருக்கப் போகிறார். இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக இருப்பார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: IPL 2023: ஐபிஎல் பரிசு மழை... வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா?
பின்னர் பேசிய சுப்மன் கில், "நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் வலுவான தொடக்கத்தை வகுத்துக் கொண்டேன். ஆனால் நிச்சயம் சதம் விளாச முடியும் என்பதை உணர்ந்தேன். மன ரீதியாகவும் அதற்கு தயாரானேன். பின்னர் வித்தியாசமாக யோசித்து விளையாட தொடங்கும் போது சதம் விளாச முடிந்தது.
பல போட்டிகளில் பங்கேற்கும் போது தான், மாற்றங்களை உணர முடியும் என்பதை அறிந்தேன். நான் எனது அடிப்படை தளத்தில் இருந்து பணியாற்ற முயற்சிக்கிறேன். கடந்த சீசனில் நான் விளையாடிய போது என்னிடம் முதலில் வந்து பேசியது ஹர்திக் பாண்ட்யா தான். நீ எப்படி விளையாட வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே விளையாடு என கூறினார். அந்த ஊக்கத்தையும், முழு சுதந்திரத்தையும் பாண்ட்யா எனக்கு கொடுத்தார்" என குறிப்பிட்டார்.