லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விருத்திமான் சஹா, சுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். கில் ரன் ஏதும் எடுக்காத நிலையில், குருணல் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் சஹா-ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். 47 ரன்கள் எடுத்திருந்த போது குருணல் பாண்ட்யா பந்துவீச்சில் சஹா ஆட்டமிழந்தார்.
அபினவ் மனோகர் 3, விஜய் சங்கர் 10, டேவிட் மில்லர் 6 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசினார். 66 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ராகுல் திவேட்டியா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். லக்னோ அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை குருணல் பாண்ட்யா, ஸ்டொய்னிஸ் தலா 2 விக்கெட்கள், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய லக்னோ அணியில் கைல் மேயர்ஸ் 24, குருணல் பாண்ட்யா 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். லக்னோ அணி வெற்றி பெற கடைசி 5 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. மோகித் சர்மாவின் பந்தை கே.எல்.ராகுல் தூக்கி அடித்த நிலையில், யாதவிடம் தஞ்சமடைந்தது.கேப்டன் ராகுல் 68 ரன்களில் வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய ஸ்டொய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. முக்கியமான கட்டத்தில் ஆயுஷ் படோனி 8 ரன்களில் ரன் அவுட்டாக, தீபக் ஹூடாவும் 2 ரன்களில் ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் 4 விக்கெட்களை இழந்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
குஜராத் அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை மோகித் சர்மா, நூர் அகமது தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ரஷீத் கான் ஒரு விக்கெட் எடுத்தார். கடைசி ஓவரை சிறப்பாக வீசிய மோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.