காபூல்: கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைப்பினால் கைப்பற்றப்பட்டது. ஆப்கன் கைப்பற்றப்பட்டபோதே அங்கு கலை, கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்றார் போல், பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவசியமில்லை என தாலிபன் கலாசார அமைப்பின் துணைத் தலைவர் அகமதுல்லா வாசிக் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்புக்கு சர்வதேச அளிவில் கண்டனக் குரல்கள் எழுந்தன.
தாலிபான் எச்சரிக்கை
அதைதொடர்ந்து, தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.
போட்டிகளின்போது சியர் லீடர்ஸாக பெண்கள் நடனமாடுவது, மைதானத்தில் பார்வையாளராக பெண்கள் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இந்த தடை உத்தரவை தாலிபான் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் ஊடகவியலாளர் ஃபாவத் அமன் தனது ட்விட்டர் பக்கத்தில்," தாலிபான் மைதானத்தில் பெண்கள் நடனமாடுவதாலும், பார்வையாளராக இருப்பதாலும் ஐபிஎல் போட்டியை ஒளிப்பரப்பக் கூடாது என எச்சரித்துள்ளனர். தாலிபான்கள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடைவிதித்திருப்பது மிகவும் நகைப்பிற்குரியது. " எனப் பதிவிட்டுள்ளார்.
'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் நேற்று முன்தினம் (செப். 19) தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க: தாலிபன்களால் முடிவுக்கு வருகிறதா ஆப்கன் கிரிக்கெட்?