அபுதாபி: ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி இரண்டாம் கட்டப் போட்டிகள் செப். 19ல் தொடங்கின.
மோசமான பேட்டிங்
தொடரில் நேற்று (செப். 25) நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதியது.
இப்போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் சிறப்பாக பந்துவீசி, பலமான டெல்லியின் பேட்டிங் வரிசையை 154 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.
இரண்டாவது முறையாக...
ஆனால், ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 70 ரன்கள் அடித்தும், அவருக்கும் துணையாக நின்று ரன்கள் சேர்க்க யாருமில்லாததால் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசாமல், பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் அணி கேப்டன் மற்றும் வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
இத்தொடரில், ராஜஸ்தான் அணி இரண்டாவது முறையாக இந்த தவறை செய்வதால், கேப்டன் சாம்சனுக்கு ரூ. 24 லட்சமும், மற்ற வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சத்திற்கும் குறைவாக அல்லது போட்டி வருமானத்தில் இருந்து 25 விழுக்காடும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 21ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும், பந்துவீச அதிக ஓவர்களை எடுத்துக்கொண்டதால், கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:IPL 2021: டெல்லியின் பவர் பேட்டிங்கை கட்டுப்படுத்திய ராஜஸ்தான்