IPL 2021 RR vs PBKS : ராஜஸ்தான் ராய்ல்-ஐ பந்தாடி பஞ்சாப் கிங்ஸ் 221 ரன்கள் குவிப்பு! - மும்பை வான்கடே மைதானம்
ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 222 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், மயங்க் அகர்வால் 14 (9) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மூன்றாவதாக களமிறங்கிய கிறிஸ் கெயில், ராகுலுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினார்.
பத்தாவது ஓவரை வீசிய ரியான் பராகின் சுழலில், கெயில், பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அவர், 28 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடக்கம்.
அடுத்து இறங்கிய தீபக் ஹூடா, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில் கே.எல்.ராகுல் தான் சந்தித்த 30ஆவது பந்தில் சிக்சர் அடித்து அரை சதத்தைக் கடந்தார். மறுமுனையில் தீபக் ஹூடாவும் அதிரடியாக 20 பந்துகளில் அரை சதம் அடித்து மிரட்டினார்.
அதன் பின்னர் கிறிஸ் மோரிஸ் வீசிய 17ஆவது ஓவரில் ஹூடா 64 (28) ரன்களிலும், பூரான் ரன் எடுக்காமலும் வெளியேறினர். அதிரடி காட்டி வந்த ராகுல், கடைசி இரண்டாவது பந்தை சிக்சருக்கு அனுப்ப முயல,
அதனை பவுண்டரி லைனில் நின்ற திவேத்தியா லாவகமாகத் தடுத்து, ராகுலின் அதிரடிக்கு முடிவு கட்டினார். இதனால் ராகுலின் 91(50) சதமடிக்கும் முயற்சி தகர்ந்தது. ஆட்டத்தின் இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது.
கடைசி ஐந்து ஓவர்களில், பஞ்சாப் கிங்ஸ் 60 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் சக்காரியா 3 விக்கெட்டுகளையும், மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.