பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கு நேற்றிரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக,அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல்வால் அழற்சி என்னும் ‘அப்பெண்டிசைட்டிஸ்’ இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றிரவு கே.எல். ராகுல் வயிற்று வலியால் துடித்தார். மருந்துகள் கொடுத்தும் சரியாகவில்லை. அவரை உடனே எமர்ஜென்சி அறைக்கு அழைத்துச் சென்று சோதனைகள் செய்ததில் அவருக்கு திடீரென குடல்வால் அழற்சி இருப்பது தெரியவந்தது.
இதை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதால், கே.எல். ராகுல் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் போட்டிகளுக்கு அணியை மயாங்க் அகர்வால் வழிநடத்துவார்” என்று கூறியுள்ளது.
இன்று அகமதாபாத்தில் இரவு ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கே.எல். ராகுல் இல்லாதது, நிச்சயம் அணிக்குப் பின்னடைவுதான். அறுவை சிகிச்சைமுடிந்து சில நாள்கள் ஓய்வு பெற்றுவிட்டு அவர் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.