மும்பை: ஐபில் போட்டிகளின் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது குறித்து இன்று பிசிசிஐ குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பான முக்கிய தகவல், இன்று (மே.29) நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்திற்கு பின்னர் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் மதியம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
இரண்டு அணிகளின் வீரர்கள், நிர்வாகிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 14ஆவது சீசன் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் மீண்டும் எங்கு நடத்தப்படுமா, மீதமுள்ள போட்டிகள் எங்கு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஐபில் தொடர் மீண்டும், வரும் செப்டம்பர் மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. மீதமுள்ள போட்டிகள், 'ஒரே நாளில் இரண்டு போட்டிகள்' என்ற முறையிலும், 7 போட்டிகள் 'ஒரு நாளில் ஒரு போட்டி' என்ற முறையிலும் நடத்தப்படும் என்றும் தகவல்கள் கசிந்தது.
தொடர்ந்து 21 நாள்களில் போட்டிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ-இன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.