மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை விளையாடி உள்ள 12 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று +0.023 ரன் ரேட்டுடன் புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. தனது முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்தது.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 12 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றிபெற்று +0.210 ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த ஆட்டத்தில் மிட்செல் மார்ஷின் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.
ஏற்கெனவே ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில் , அடுத்த 3 இடங்களுக்கு 7 அணிகள் போட்டி போடுகின்றன. ராஜஸ்தான் அணி நேற்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி +.304 ரன் ரேட்டுடன் இருப்பதால் பிளே ஆஃப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் - பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை பேட்டிங்கை விட பவுலிங் சிறப்பாக உள்ளது. ரபாடாவின் வேகம் , ரிஷி தவானின் அனுபவம் , ராகுல் சஹாரின் சுழல், அர்ஷ்தீப் சிங்கின் யார்க்கர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக உள்ளது. தவான், பனுகா ராஜபக்ச , லியன் லிவிங்ஸ்டோன் , பேர்ஸ்டோவ் ஆகியோரின் பேட்டிங் ஒரு சேர கிளிக்கானால் பஞ்சாப் 200 ரன்களுக்கு மேல் குவிப்பது உறுதி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்கம் சொதப்பலாக இருக்கிறது. உடல்நலக் குறைவால் பிரித்வி ஷாவுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட பரத் பேட்டிங்கில் சோபிக்க தவறுவதால் வார்னரையே டெல்லி கேப்பிட்டல்ஸ் பெருமளவு நம்பியுள்ளது. ரிஷப் பந்த் , ரோவ்மான் பவல் நிலைத்து நீண்ட நேரம் ஆடும் பட்சத்தில் எதிரணிக்கு கடும் சவால் அளிக்கலாம். சம பலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.