ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயதேவ் உனத்கட் தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசி, பிருத்வி ஷா 2 (5), ஷிகார் தவான் 9 (11), ராஹானே 8(8) ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் முஸ்தாபிஷூர் ரஹ்மான் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, டெல்லி அணி 37 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி, 30 பந்துகளில் 9 பவுண்டரியுடன் அரை சதத்தைக் கடந்தார். இருப்பினும் அடுத்து அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே வீணாக ஓடி ரன்அவுட் ஆனார்.
அவர் வெளியேறிய பின், மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்காததால், டெல்லி அணி நிர்னயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் அணியில் ஜெயதேவ் உனத்கட் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிஷூர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
இதையடுத்து, 148 ரன் எடுத்தால் வெற்றி இலக்க்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா களமிறங்கினர். இந்த ஜோடியில், 11 பந்துகளை எதிர்கொண்ட மனன் வோரா 9 ரன்னிலும், 7 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் 2 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னிலும், சிவம் துபே 2 ரன்னிலும், ரியான் பராக் 2 ரன்னிலும், ராகுல் திவாடியா 19 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனிடையே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 43 பந்துகளில் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
அதிரடியாக ஆடிய இந்த ஜோடி, அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதி ஓவரில் கிறிஸ் மோரிஸ் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை தெறிக்கவிட்டதால் ராஜாஸ்தான் அணி 19.4 ஓவரில் 150 எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில், ஜெயதேவ் உனத்கட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: IPL 2021 RR vs DC: டெல்லி கேபிடல்ஸ் அணி 147/8 ; ரிஷப் பண்ட் ஆறுதல்