சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேமரூன் க்ரீன் 6, இஷான் கிஷண் 7 ரன்களில் வெளியேறினர். கேப்டன் ரோஹித் டக் அவுட்டானார். அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நேஹல் வதேரா அரைசதம் விளாசினார். 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். ஸ்டப்ஸ் 20, டிம் டேவிட் 2, அர்ஷத் கான் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. ஆர்ச்சர் 3, பியூஷ் சாவ்லா ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
சென்னை அணியில் அதிகபட்சமாக 'குட்டி மலிங்கா' என வர்ணிக்கப்படும் பதிரானா 3 விக்கெட் வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். தீபக் சாஹர், தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 140 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட் 30, கான்வே 44 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஹானே 21, அம்பதி ராயுடு 12 ரன்களில் வெளியேறினர். 17.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷிவம் துபே 26, கேப்டன் தோனி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை அணியில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்களையும், ஸ்டப்ஸ், மத்வால் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருது சென்னை அணியின் பந்துவீச்சாளர் பதிரானாவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 13 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.