ஹைதராபாத்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக அணிகளுக்கு இடையில் வீரர்கள் மாற்றிக் கொள்ளும் டிரேட் முறை நடைபெற்று வந்தது. அந்த வகையில் சில அணிகள் தங்களது வீரர்களை மற்ற அணிகளுடன் மாற்றி கொண்டன.
இதனையடுத்து அனைத்து அணிகளும் தங்களின் அணியில் வீரர்களை தக்க வைத்து கொண்ட அல்லது விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இன்று (நவ. 26) பிசிசிஐயிடம் சமர்ப்பித்தது. இதற்கிடையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செய்லபட்டு வரும் ஹர்திக் பாண்டியா மீண்டும் அவரை வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்புவதாக செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக பரவி வந்தன.
இந்நிலையில், அப்படியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி அவர்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஹர்திக் பாண்டியாவே அந்த அணிக்கு கேப்டனாக தொடர்கிறார். மேலும் டேவிட் மில்லர், முகமது ஷமி, விருதிமான் சஹா, சுப்மன் கில், கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, ஆர் சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஸ் லிட்டில், மோகித் சர்மா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல் அந்த அணியில் இருந்து யாஸ் தயால், கே.எஸ் பரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப் மற்றும் இலங்கை வீரர் தசுன் ஷனகா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மும்பை அணியை பொருத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் திலக் வர்மா ஆகிய முக்கிய வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ளனர்.
மேலும், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ராமன்தீப் சிங், ராகவ் கோயல், அர்ஷத் கான் மற்றும் ஹிருத்திக் ஷோக்கீன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராகுல் திரிபாதி, டி நடராஜன், கிளென் பிலிப்ஸ் உள்ளிட்ட 19 வீரர்களையும் தக்கவைத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கே.எல்.ராகுல், குர்னால் பாண்டியா, குயிண்டன் டி காக், நிகோலஸ் பூரான் ஆகியோரை தக்கவைத்துள்ளது. மேலும், ஷ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், நிதீஸ் ரானா உள்ளிட்ட 13 வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்கவைத்துள்ளது. பஞ்சாப் அணியில் இருந்து தமிழக வீரர் ஷாருக்கான் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி.. நடப்பு சீசனில் முதல் தோல்வி!