மும்பை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஐபிஎல் 2021 தொடர் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஏனென்றால், பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகளை சேர்க்க முன்வந்துள்ளது.
அதன்படி அடுத்தாண்டு ஐபிஎல் ஆட்டத்தில் மொத்தம் பத்து அணிகள் இடம்பெறவிருக்கிறது.
புதிய அணிகளில் குஜராத், உத்தரப் பிரதேச மாநிலங்களின் அணிகள் களமிறங்கலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. இருப்பினும், புதிய அணிகள் எந்த மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு களமிறங்கப் போகின்றன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகவில்லை.
ஐபிஎல் புதிய அணிகளுக்கான ஏலம்
இந்தப் புதிய அணிகளுக்கான ஏல அழைப்பினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஆரம்பத்தொகையை ரூ.2000 கோடியாக பிசிசிஐ நிர்ணயித்துள்ளது. அத்துடன் ஏலம் எடுக்கும் நிறுவனங்களின் தகுதி, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்த நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் ஏலம் கோரும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் முன்பணமாக ரூ. 10 லட்சம் கட்டவேண்டும். இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படாது.
ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே அணியை வாங்க தகுதியானவை.
எவ்வாறு அணுகுவது?
விருப்பமுடைய நிறுவனங்கள் ittipl2021@bcci.tv என்ற மெயில் ஐடியில் அணுகவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 5000 கோடிக்கு ஏலம் முடிக்கப்படும் என பிசிசிஐ எதிர்பார்ப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த ஏலத்தில் அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்கா குழுமம், மருந்து நிறுவனம் டொரண்ட் குழுமம் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியம், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்டேடியம் புதிதாக இடம்பெற்றுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. அன்றையப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனியின் வழக்கு ஒத்திவைப்பு!