''சர்வதேச வீரர் அல்லாத ஒருவர், இவ்வளவு துல்லியத்துடன் அதிக யார்க்கர்களை வீசுவதை இதுவரை நான் பார்த்ததில்லை''
தமிழ்நாட்டின் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜனைப் பற்றி இந்திய அணிக்காக ஆடிய இர்ஃபான் பதான் கூறிய வார்த்தைகள் இவை. கிரிக்கெட்டில் யார்க்கர் வீசி விக்கெட் வீழ்த்துவது என்பதை பார்க்கவே ஒரு அழகியல் தான்.
ஆனால் யார்க்கர் வீசுவது அவ்வளவு எளிதானது அல்ல. கொஞ்சம் பிசிறு தட்டினாலும் லோ ஃபுல் டாஸாக மாறிவிடும். அப்படி சென்றால் நிச்சயம் பேட்ஸ்மேன்கள் பந்தினை சிக்சருக்கு அனுப்பிவிடுவர். பும்ரா போன்று அதிக அளவில் உறுதியுடன் இருக்கும் வீரர் யார்க்கர் பந்து வீசுவது அனைவரும் பார்த்தது தான்.
ஆனால் சர்வதெச போட்டிகளில் இதுவரை ஆடாத ஒருவர் துல்லியத்துடன் யார்க்கர்களை வீசியது சர்வதேச வீரர்களின் கண்களை இவர் பக்கம் திருப்பியது. பிரெட் லீ, இர்ஃபான் பதான், யுவராஜ் சிங், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே என அனைவரும் இவரை பாராட்டி தள்ளியுள்ளனர்.
நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி 18 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்திருந்தது. நிச்சயம் டெல்லி அணியின் ஸ்கோர் 200 ரன்களை தொட்டுவிடும் என நினைத்த அனைவருக்கும் பெரும் ஆச்சரியம். கடைசி 2 ஓவர்களில் டெல்லி அணியால் வெறும் 13 ரன்களை தான் எடுக்க முடிந்தது. அதற்கு முக்கியக் காரணம் நடராஜனின் யார்க்கர் பந்துகள்.
இந்தப் போட்டி மட்டுமல்ல ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டி வில்லியர்ஸிற்கு வீசிய யார்க்கர் காலத்திற்கும் நிற்கும். இந்தத் தொடரில் 377 பந்துகளை வீசியுள்ள இவர், 504 ரன்களை விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியத் தொடருக்காக பயணம் செய்யவுள்ள இந்திய அணி நெட் பவுலர்களில் ஒருவராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெஹ்ராவுக்கு பின் சரியான இடதுகை பந்துவீச்சாளர் கிடைக்காமல் இருந்த இந்திய அணிக்கு, சரியாக தேடலாக நடராஜன் இருப்பார் என பலரும் கருத்து பகிர்ந்துள்ளனர்.
இவரைப் பற்றி நேற்று பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், '' அவர் சிறகுவிரித்து பறப்பதற்காக காத்திருக்கிறார். இந்தத் தொடர் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு அவர் தான்'' என்றார்.
இதையும் படிங்க: ஆர்சிபி ரசிகர்களுக்கு எமோசனல் குறிப்பை எழுதிய கேப்டன் கோலி!