ஐபிஎல் தொடரில் இன்று (அக்.18) நடைபெற்று வரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியின் சுப்மன் கில் - ராகுல் திரிபாதி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் திரிபாதி 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 'யார்க்கர் மன்னன்' நடராஜன் வீசிய பந்தில் கிளீன் போல்டாகினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - நிதீஷ் ராணா இணை, எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விளாசி ரன்வேட்டையைத் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் பவுண்டரிகளை பறக்கவிட்ட ராணா 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் 36 ரன்களோடு நடையைக் கட்டினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ரஸ்ஸல், 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜனிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இறுதியில் தினேஷ் கார்த்திக் - இயன் மோர்கன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக சுப்மன் கில் 36 ரன்களை எடுத்தார். ஹைதராபாத் அணி தரப்பில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: கேகேஆர் அணியில் விளையாடவுள்ள டிம் செஃபெர்ட்!