ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சீசனில் இரு அணிகளும் படுதோல்வியைச் சந்தித்துள்ளதால், இனி வரும் போட்டிகளில் வெற்றியைப் பெற்றாக வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து, புள்ளிபட்டியலில் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இதனால் இனி வரும் ஆட்டங்களில் சிஎஸ்கே அணி எழுச்சி கண்டு, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் பங்கேற்றுள்ள ஏழு போட்டிகளில் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலிலும் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தொடக்கப் போட்டிகளில் அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி வந்த நிலையில், தற்போது அதே தவறை நடுவரிசை வீரர்களும் செய்து வருது அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி இப்படி ஒரு படுதோல்வியை சந்தித்ததில்லை. இதுகுறித்து தோனி கூறும் போது, சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. அவற்றை சரிசெய்யவே முயற்சித்து வருகிறோம் என்றும் சட்டென உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.
மேலும் சிஎஸ்கே அணி பங்கேற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்தாண்டு அணி இருக்கும் ஃபார்மை பார்த்தால், சந்தேகம் தான் என சென்னை ரசிகர்களே வருத்தமாக இருக்கின்றனர்.
அதேசமயம் இனி வரும் ஏழு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றியைப் பெற்றால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை சென்னை அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நடப்பு சீசனில் பங்கேற்ற ஏழு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.
சென்னை அணியுடன் ஒப்பிடும் போது ஹைதராபாத் அணியின் நிலை, நமபிக்கையளிக்கும் வகையிலேயே உள்ளது. காரணம் வார்னர், பேர்ஸ்டோவ், வில்லியம்சன், மனீஷ் பாண்டே என அதிரடி வீரர்களுடன் நடராஜன், ரஷித் கான் போன்ற சிறப்பான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது.
இருப்பினும் பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராபாத் அணி, பந்துவீச்சு தரப்பில் செய்த சிறு சிறு தவறுகளாலே தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால் அவற்றை சரிசெய்து மீண்டும் பழைய நிலைக்கு ஹைதராபாத் அணி திரும்பும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முன்னதாக இந்த சீசனில் சிஎஸ்கே அணிகெதிரான போட்டியிலும் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் தனது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் ஹைதராபாத் அணி களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
சிஎஸ்கேவும் டாஸும்:
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் முதல் பந்துவீச்சை மட்டுமே தேர்வு செய்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஒருவேளை சிஎஸ்கே அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் சென்னை அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து எதிரணிக்கு சேஸிங்கை நிர்ணயிக்கலாம் என்ற கருத்துகளையும் சிஎஸ்கே ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். ரசிகர்களின் கருத்துகளுக்கு சிஎஸ்கே செவிசாய்க்குமா என்பதை இன்றைய ஆட்டத்தின் போது பார்ப்போம்.
சிஎஸ்கே -வின் பிளே ஆஃப் வரலாறு:
ஐபிஎல் தொடரைப் போறுத்தவரை இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையை சென்னை அணி தன்வசம் வைத்துள்ளது.
ஆனல் தற்போது இருக்கும் சூழ்நிலையில் சென்னை அணியால், அதனை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழத்தொடங்கியுள்ளது.
இருப்பினும் ஐபிஎல் தொடரில் முதல் பாதியை விட, இரண்டாம் பாதியின் ஆட்டம்தான் கலைகட்டும். அதன்படி இன்று முதல் தொடங்கும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிஎஸ்கே எழுச்சி கண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற கேள்வியுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உத்தேச அணி:
சிஎஸ்கே: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், கரன் சர்மா, ஷர்துல் தாக்கூர்.
எஸ்ஆர்எச்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியாம் கார்க், அபிஷேக் சர்மா, ரஷித் கான், நடராஜன்,கலீல் அஹ்மத், சந்தீப் சர்மா.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டிவில்லியர்ஸ் அதிரடியால் ஆர்சிபி அபார வெற்றி!