ஐபிஎல் தொடரில் இன்று (அக்.11) நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வார்னர் - மனீஷ் பாண்டே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் சிறப்பாக விளையாடிய மனீஷ் பாண்டே ஐபிஎல் தொடரில் தனது 17ஆவது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 54 ரன்களையும், வார்னர் 48 ரன்களையும் எடுத்தான்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியெறினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - ராபின் உத்தப்ப இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்க போராடினர். பின்னர் உத்தப்பா 18 ரன்களிலும், சாம்சன் 26 ரன்களிலும் ரஷித் கானிடம் விக்கெட்டை கொடுத்து நடையைக் கட்டினர்.
இதையடுத்து ரியான் பராக் - ராகுல் திவேத்தியா இணை அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி சார்பில் ராகுல் திவேத்தியா 45 ரன்களையும், ரியான் பராக் 42 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல் 2020: தேதி, இடம், அட்டவணை அறிவிப்பு!