ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் வீரர்கள் மைதானத்திற்கு வருவதற்கு முன்பாக, முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கருப்பு பட்டை அணிந்து நுழைந்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தது. மேலும் ராகுல் இப்போட்டியில் இரண்டு ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் இரண்டாயிரம் ரன்களை கடந்து அசத்தினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வால் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் வீசிய பந்தில் கிளீன் போல்டானார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரில் தனது 17ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதையடுத்து மறுமுனையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதமும் இதுவாகும்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 132 ரன்களை குவித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஷிவம் தூபே இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: ஃபிட் இந்தியா 2020: பிரதமர் மோடியுடன் விராட் கோலி உரையாடல்!