மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக படிகல் 74 ரன்களை சேர்த்தார். மும்பை அணி தரப்பில் ஜாஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டி காக் 15 ரன்களிலும், இஷான் கிஷான் 25 ரன்களிலும், சவுரவ் திவாரி 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தால் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது 9ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அவருடன் இணைந்த ஹர்திக் பாண்டியாவும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்கவிட்டார்.
இதனால் மும்பை அணி 19.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 79 ரன்களை எடுத்தார்.
இதையும் படிங்க:அஸ்தானா ஓபன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய திவிஜ் ஷரண் இணை!