ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (செப்.23) நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் கணக்கை உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் தனது 37ஆவது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 80 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான சுப்மன் கில், சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் - நிதீஷ் ராணா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ராணாவும் 24 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த அதிரடி வீரர்கள் ரஸ்ஸல், மோர்கன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க:ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - பெங்களூரு போலீசாரிடம் பிடிபட்ட கும்பல்