பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.27) நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் இணை, அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மயங்க் அகர்வால், 45 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மேலும் இது அவருடைய முதல் ஐபிஎல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுலும் அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 223 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 106 ரன்களையும், கே.எல்.ராகுல் 69 ரன்களை விளாசினர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட் இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - சஞ்சு சாம்சன், எதிரணியின் பந்துவீச்சை சிக்சர்களாகப் பறக்கவிட்டனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்மித், அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் அவர் அரைசதமடித்த கையோடு விக்கெட்டையும் இழந்து பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன், தனது 12ஆவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம்சன் விக்கெட் இழக்க, ராஜஸ்தான் அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
ஆனால் அந்த அணியின் ராகுல் திவேத்தி, ஷெல்டன் காட்ரெல் வீசிய 17ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதனால் ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஆசிய உலக சுற்றுப்பயணம் ஜனவரி 2021 க்கு ஒத்திவைப்பு!