ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற ஆறாவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீரர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து மைதனாத்தில் நிழைந்தனர்.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இதில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுச்செய்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 132 ரன்களை விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ரன்னாகவும் இது பதிவானது.
பின்னர் இமாயலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே ஆர்சிபி அணியின் தேவ்தத் படிகல், பிளீப்ஸ், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதையடுத்து ஃபிஞ்சுடன் ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி அணியை தோல்வியிலிருந்து மீட்க முயற்சித்தார். ஆனால் ஃபிஞ்ச் 20 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து டி வில்லியர்ஸும் 28 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அப்போதே பெங்களூரு அணியின் தொல்வி உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அந்த அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களை எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் பிஷ்னோய், முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இறுதியில் பெங்களூரு அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களை மட்டுமே எடுத்து. இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க: ஃபிட் இந்தியா 2020: பிரதமர் மோடியுடன் விராட் கோலி உரையாடல்!