ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக டெல்லி அணி திடீரென ஸ்டோய்னிஸை தொடக்க வீரராக தவானுடன் களமிறக்கியது.
இதற்கு பலனாக ஸ்டோய்னிஸும் சிறப்பாக தொடக்கம் கொடுத்தார். 38 ரன்கள் அடித்த ஸ்டோய்னிஸ், பவர் ப்ளே ஓவர்களில் டெல்லி அணிக்கு தேவையான ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
ஏற்கனவே இவர் பிக் பாஷ் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய அசத்தியவர் என்பதால், தொடக்க வீரராகவே தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று தொடக்க வீரராக களமிறங்கியது பற்றி ஸ்டோய்னிஸ் கூறுகையில், '' பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சிலமுறை என்னிடம் தொடக்க வீரராக களமிறக்குவது பற்றி பேசினார். ஏற்கனவே ஒருமுறை மூன்றாம் வரிசையில் களமிறங்கினேன். ஆனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்தது.
ஆனால் நேற்று நடந்தப் போட்டி எங்களுக்கு நல்ல பலனை கொடுத்தது. பிட்ச்சில் பந்து முதல் சில ஓவர்களில் நன்றாக ஸ்விங் ஆனது. அதனால் சில ஓவர்கள் கவனமாக ஆடினேன்'' என்றார்.
டெல்லி அணியின் இந்த முயற்சி இறுதிப்போட்டியிலும் தொடர்ந்தால் ஸ்டோய்னிஸ், மும்பை பந்துவீச்சிற்கு எதிராக தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் குவாலிஃபயரின் முதல் போட்டியில் பும்ரா ஸ்டோய்னிஸை ஒரே பந்தில் வெளியேற்றினார்.
பும்ரா, போல்ட் இருவரும் மும்பை அணிக்காக இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக நாளை நடக்கும் ஆட்டத்தில் ஸ்டோய்னிஸ் எப்படி ரன்கள் சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் இப்படியே 80 நாள் பயோ-பபுளில் இருக்கணுமா? விராட் கோலி மிரட்சி!