விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 45ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் ஏழு வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும் 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பாண்டியா சகோதரர்கள், பொல்லார்ட், பும்ரா, போல்ட் என நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், மும்பை அணி தனது ஐந்தாவது ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
மேலும் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள மும்பை அணி செயல்படும் என்பதால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் போராட வேண்டியிருக்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, த்ரில் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தாலும், தொடர்ச்சியாக சந்தித்த தோல்விகள் காரணமாக புள்ளிப்பட்டியலின் ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் அனைத்து போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழலிற்கு உள்ளாகியுள்ளது.
அதிரடிக்குப் பெயர்போன சஞ்சு சாம்சன், பட்லர், ஸ்மித், ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டாலும், நடுவரிசை வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதால், ராஜஸ்தான் அணி தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. பந்துவீச்சில் ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டாலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சோபிக்கத் தவறிவருவதால், அது அணிக்குபெரும் பலவீனமாக அமைந்துள்ளது.
அதிலும் ஹைதராபாத் அணியுடனான போட்டியின் போது நட்சத்திர வீரர்கள் சரிவர சோபிக்காததால், ராஜஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்தது. ஏனினும் இனி வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிச்சயம் வெற்றி பாதைக்கும் திரும்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உத்தேச அணி:
ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேத்தியா, கார்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புட்.
மும்பை : பொல்லார்ட் (கேப்டன்), டி காக், சவுரப் திவாரி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, கவுல்டர் நைல், ராகுல் சாஹர், போல்ட், பும்ரா.
இதையும் படிங்க:சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில் தேவ்!