கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த சீசனில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், இன்றைய போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
தொடரின் முதல் போட்டியில் நூழிலையில் தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணி, இரண்டாவது போட்டியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அதிலும் ஆர்சிபி அணிகெதிரான போட்டியில் கே.எல்.ராகுல் சதமடித்து தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதேசமயம் மயங்க் அகர்வால், மேக்ஸ்வெல், கரூண் நாயர், ஜேம்ஸ் நீஷம் என அதிரடி வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகவே செய்து வருகின்றனர். பந்துவீச்சு தரப்பில் முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய் ஆகியோர் எதிரணியின் பேட்டிங் வரிசையை நிர்மூலமாக்கி, அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளனர்.
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். காரணம், கடந்த சில ஆண்டுகளில் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கிறிஸ் கெய்ல் சிக்சர் மழை பொழிந்துள்ளார். மேலும் அந்த அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் நிக்கோலஸ் பூரனை நீக்கி, கிறிஸ் கெய்ல் அணியில் இடம்பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
பேட்டிங், பந்துவீச்சு என அசத்திவரும் பஞ்சாப் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
சென்னை அணிக்கெதிரான போட்டியில் அசத்திய ராஜஸ்தான் அணி, இந்த சீசனின் இரண்டாவது போட்டியை இன்று விளையாடவுள்ளது. அதிலும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் சிக்சர்களுக்கு பஞ்சமிருக்காது.
மேலும் கடந்த போட்டியில் சென்னை அணி பந்துவீச்சாளர்களை பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்திலும் அதனை நிச்சயம் வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. சிஎஸ்கே அணிகெதிரான ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் இன்னிங்ஸும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, ரியான் பராக் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி ஏறக்குறைய வெற்றியைப் பதிவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
பந்துவீச்சு தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், உனாட்கட், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தங்களது பங்களிப்பைச் சரியாக செய்து வருகின்றனர். வலிமையான பேட்டிங் மற்றும் பந்துவீச்சாளர்களுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்:
பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுடைய வெற்றி விகிதாச்சாரமும் ஒன்றாக இருப்பதினால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
மைதானம்:
இன்றைய போட்டி நடைபெறவுள்ள சார்ஜா மைதானமானது துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களுக்கு அப்படியே எதிர்மறையானது. இதனால் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
உத்தேச அணி:
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, டேவிட் மில்லர்/டாம் கர்ரன், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் திவேத்தியா.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல். ராகுல் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், கிளென் மேக்ஸ்வெல், கரூண் நாயர், சர்ப்ராஸ் கான், ஜேம்ஸ் நீஷம் முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020 : ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த கொல்கத்தா!