ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கலைகட்டியுள்ளது. இதில் இன்று (அக்.25) நடைபெற்று வரும் 45ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் டி காக் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - சூர்யகுமார் யாதவ் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷான், பவுண்டரி விளாச முற்பட்டு 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 40 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் பொல்லார்டும், 6 ரன்களில் நடையை கட்ட மும்பை அணி தடுமாற்றத்தை சந்தித்தது.
இறுதியில் சவுரவ் திவாரி - ஹர்திக் பாண்டியா இணை அதிரடியாக விளையாடி, எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு அசத்தியது. தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 60 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: விக்கெட்டில் சதமடித்த சந்தீப்!