கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் பார்வையாளர்களின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.25) நடைபெற்ற எட்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பேர்ஸ்டோவ், ஐந்து ரன்களில் விக்கெட் இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னரும் 36 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே - சஹா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய மனீஷ் பாண்டே ஐபிஎல் தொடரில் தனது 16ஆவது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதன் மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 51 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய கேகேஆர் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில், சுனில் நரைன் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ராணா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சிறப்பாக விளையாடி வந்த ராணா, 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் ஐந்தாவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில் 70 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இது கேகேஆர் அணி இந்த சீசனில் பெற்ற முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்னும் சில போட்டிகளில் அஸ்வின் இருக்க மாட்டார்: ஸ்ரேயாஸ்