துபாய்: பிட்சை சரியாகக் கணிக்க தவறியதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரன் குவிக்க முடியாமல் மோசமான தோல்வியைத் தழுவியதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று (அக். 31) நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் தோல்வியை தழுவியது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதன் பின்னர் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:
பிட்ச்சின் போக்கை சரியாகக் கணிக்க தவறிவிட்டோம். ஆட்டத்தின் தொடக்கமே நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
பவர்பிளே ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் வேகம் குறைந்தது. பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது முக்கியமானதாக இருக்கும் நிலையில், எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இதேபோல் பல குறைகளைக் கூறலாம். இருப்பினும் நேர்மறையான எண்ணத்துடன் வலிமையாக மீண்டு வருவோம் என நம்புகிறோம்.
நல்ல தொடக்கத்தை ஓபனர்கள் அளிக்க வேண்டும். வேகம் கிடைத்த பின்னர் ரன்களை குவிக்க வேண்டும். இன்று விளையாடியது போன்ற ஆடுகளங்களில் 150 முதல் 160 ரன்கள் தேவை. எனவே அதை கருத்தில்கொண்டு பயம் இல்லாமல் விளையாட வேண்டும். அடுத்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதே நிலைதான் ஆர்சிபி அணிக்கும் இருப்பதால், அந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணி 20 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியனஸ் அணியின் வேகக் கூட்டணியான பும்ரா, போல்ட், கவுன்டர் நைல் ஆகியோர் இணைந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதேபோல் 34 பந்துகள் மீதம் இருக்க மும்பை இந்தியனஸ் அணி வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.