ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பட்லர், ஸ்மித், சாம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லமோர் அதிரடியாக விளையாடி 47 ரன்களை குவித்தார். இறுதியில் ராகுல் திவேத்தியா, ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹிபால் லமோர் 47 ரன்களை எடுத்தார். பெங்களூரு அணி சார்பில் யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஆரோன் ஃபிஞ்ச் சொற்ப ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - படிகல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் ஆர்சிபி அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்களையும், தேவ்தத் படிகல் 63 ரன்களையும் குவித்தனர்.
இதன் மூலம் ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சு!