ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வரும் 33ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அணியின் தொடக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் - ராபின் உத்தப்பா இணை அதிரடியான தொடக்கத்தை தந்தனர்.
இதில் ஸ்டோக்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ராபின் உத்தப்பா 41 ரன்களில் ஆட்டமிழந்து, அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன் பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 9 ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - ஸ்டீவ் ஸ்மித் இணை, தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சிறிது நேரத்தில் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்து, எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்க விட்டனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பட்லர் 24 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் வெளுத்துவாங்கிய ஸ்மித் அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக ஸ்மித் 57 ரன்களையும், உத்தப்பா 41 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பாக். வேகப்புயல் உமர் குல்!