ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.02) நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த வார்னர் - மனீஷ் பாண்டே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 29 ரன்களில் மனீஷ் பாண்டே ஆட்டமிழக்க, 28 ரன்கள் எடுத்திருந்த வார்னரும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களை தொடர்ந்து வந்த வில்லியம்சன் 9 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா - பிரியாம் கார்க் ஆகியோர், சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரியாம் கார்க் 23 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரியாம் கார்க் 51, அபிஷேக் சர்மா 31 ரன்களையும் எடுத்திருந்தனர்.
இதையும் படிங்க:ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்ற லெவாண்டோவ்ஸ்கி !