நேற்று (அக்.18) நடந்த இரண்டு ஆட்டங்களும் சூப்பர் ஓவர் வரை சென்றதால் ரசிகர்களிடையே ஏற்பட்ட பரபரப்பு இப்போது வரை குறையவில்லை. அதிலும் மும்பை-பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் சூப்பர் ஓவர் டை ஆன நிலையில், இரண்டாவது சூப்பர் ஓவரில் கிறிஸ் கெய்ல் சிக்சர் அடித்து வென்று கொடுத்தார்.
இந்த வெற்றிக்குப் பின் மயங்க் அகர்வால் கிறிஸ் கெய்லிடம் பேட்டி எடுத்தார். அதற்கு பதிலளித்த யுனிவர்சல் பாஸ் கெய்ல், ''நான் சூப்பர் ஓவரில் பதற்றமாகவில்லை. எனக்கு கோபமும், ஏமாற்றமும் தான் இருந்தது. எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியை இந்த அளவிற்கு கொண்டு வந்துவிட்டோமே என்ற ஏமாற்றம் தான். ஆனால் இது கிரிக்கெட் விளையாட்டு. அதனால் நிச்சயம் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்.
என்னைப் பொறுத்தவரை ஷமி தான் ஆட்டநாயகன். ஏனென்றால் ரோஹித் - டி காக் ஆகியோருக்கு எதிரான ஐந்து ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது எளிதானதல்ல. மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நான் அவரை நெட்ஸ் எதிர்கொண்டுள்ளேன். அதனால் அவரால் சரியான யார்க்கர்களை வீச முடியும் என்பது எனக்குத் தெரியும். அதனை இன்று அவர் வெளிப்படுத்தியுள்ளார்'' என்றார்.
இதைப்பற்றி ஷமி கூறுகையில், ''நிச்சயம் இது மிகச்சவாலான விஷயம். சூப்பர் ஓவரில் 15 முதல் 17 ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது வேறு விஷயம். ஆனால் நமது மூளையில் டார்கெட் குறைவு என்பது தெரிந்தும் நம்பிக்கை வைப்பது வேறு.
நான் என்னை நம்பினேன். ஒவ்வொரு முறை பந்துவீசும்போதும் இந்த பந்து மிகச்சிறந்த பந்தாக இருக்கும் என சிந்தித்தேன். அடுத்த பந்தை வீசும்போது முன்னதாக வீசிய பந்தை விட நன்றாக வீச வேண்டும் என நினைத்தேன். இதைத்தான் ஆறு பந்துகளிலும் செய்தேன்'' என்றார்.
இதைப்பற்றி மயங்க அகர்வால் கூறுகையில், ''நான் சூப்பர் ஓவரில் களமிறங்கும்போது டெல்லி அணிக்கு எதிரான போட்டி தான் நினைவுக்கு வந்தது. ஆனால் கெய்ல் அப்போது என்னிடம், 'மயங்க்... பந்தை நன்றாகப் பார். மற்றவையெல்லாம் சரியாக நடக்கும்' என்றார். அது தான் என் மனதில் இருந்தது.
பந்தை பார்த்து சரியாக அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு ரன், இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என நினைக்கவேயில்லை. பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நினைத்தோம். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்ததால், அது சரியாக நடந்தது'' என்றார்.
இதையும் படிங்க: மலிங்காவின் இடத்தை எங்களுக்கு பும்ரா நிரப்புகிறார் : பொல்லார்ட்