கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.
சூப்பர் ஓவர் வரை சென்ற இப்போட்டியில் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து, இந்த சீசனில் தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
மேலும், மும்பை அணி சார்பாக சூப்பர் ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய போதும் பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது. இதனால் ஐபிஎல் தொடரில் பும்ரா வீசிய சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டு மும்பை - குஜராத் அணிகலுக்கு இடையிலான போட்டி டிரா ஆகி, சூப்பர் ஓவர் வரை சென்றது. அப்போட்டியில் மும்பை அணிக்காக சூப்பர் ஓவரை வீசிய பும்ரா, 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை தேடி தந்தார்.
அதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டும் சூப்பர் ஓவர் வரை சென்ற மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் சூப்பர் ஓவரை வீசிய பும்ரா, 8 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து மும்பை அணிக்கு வெற்றியைத் பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: மும்பையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!