13ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.18) நடந்த முதல் போட்டியில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் ஆடின. அதில் கொல்கத்தா அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணிக்காக நான்காவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் வார்னர் ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று 47 ரன்களை எடுத்தார். இவர் நேற்று 10 ரன்களைக் கடந்தபோது, ஐபிஎல் தொடரில் ஐந்தாயிரம் ரன்கள் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இவருக்கு முன்னதாக ரெய்னா, ரோஹித், கோலி ஆகிய மூன்று இந்திய வீரர்கள் ஐந்தாயிரம் ரன்களை அடித்துள்ளனர். இந்நிலையில் ஐந்தாயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் கடந்த வீரர்களின் பட்டியலில் கோலி படைத்திருந்த சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.
157 இன்னிங்ஸ்களில் கோலி ஐந்தாயிரம் ரன்கள் அடித்திருந்த நிலையில், அதனை வார்னர் 135 இன்னிங்ஸ்களிலேயே அடித்துள்ளார்.
இந்தத் தொடரில் ஒன்பது போட்டிகளில் ஆடியுள்ள ஹைதராபாத் அணி, மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும், ஆறு போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி, அடுத்ததாக ஆடவுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ”பதற்றம் இல்லை... கோபமும், ஏமாற்றமும் தான் உள்ளது” - கிறிஸ் கெய்ல்