ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார்.
சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த மந்தீப் சிங் 27 ரன்களில் நடையைக் கட்டினார்.
மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் 63 ரன்களை விளாசினார்.இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் - பாப் டூ பிளேசிஸ் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். மேலும் இவர்கள் இருவரும் அரைசதமடித்து அசத்தினர்.இதன் மூலம் சென்னை அணியின் ஸ்கோர், ஓவருக்கு ஓவர் உயர்ந்துகொண்டே சென்றது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் இறுதி வரை போராடியும் வாட்சன் - டூ பிளேசிஸ் இணையை பிரிக்க முடியாமல் தள்ளாடினர்.இதன் மூலம் 17.4 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 83 ரன்களையும், பாப் டூ பிளேசிஸ் 87 ரன்களையும் எடுத்தனர்.