ஐபிஎல் தொடரின் 12ஆவது சீசன் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் விளையாடுகிறது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான வார்னர்-பெயர்ஸ்டோவ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இந்தத் தொடரில் 9 போட்டிகளில் ஆடியுள்ள வார்னர் 6 அரை சதம்மும் ஒரு சதமும் அடித்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 517 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதன் மூலம் ஐபிஎல் தொடர்களில் ஐந்தாவது முறையாக 500 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் வார்னர், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கியதையடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மட்டும் வார்னர் பங்கேற்கவில்லை. மேலும், இந்த ஆண்டுத் தொடரில் இவருடன் தொடக்க வீரராக களமிறங்கும் பெயர்ஸ்டோவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 445 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.