12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 45ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச தீர்மானித்தார். பாகிஸ்தானுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ராஜஸ்தான் வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஆகியோர் இங்கிலாந்துக்கு சென்றனர்.
இதனால், அவர்களுக்கு பதிலாக அஷ்டன் டர்னர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் ராஜஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டனர். அதேபோல், ஹைதராபாத் அணியில் பேயர்ஸ்டோவ், யூசஃப் பதான், சந்தீப் ஷர்மா ஆகியோருக்கு பதிலாக கேன் வில்லியம்சன், சஹா, சித்தார்த் கவுல் அணியில் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணி 28 ரன்களை எட்டிய நிலையில், கேப்டன் வில்லியம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மணிஷ் பாண்டே, வார்னருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்களை சேர்த்த நிலையில், வார்னர் 37 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 32 பந்துகளை எதிர்க்கொண்ட அவர் ஒரேயொரு பவுண்டரியையும் விளாசவில்லை.
இதைத்தொடர்ந்து, அதிரடியாக ஆடிய மணிஷ் பாண்டே 61 ரன்களுக்கு ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 121 ரன்களை எட்டியது.
மணிஷ் பாண்டேவை தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விஜய் சங்கர்(8), ஷகிப்-உல்-ஹசன் (9), தீபக் ஹூடா (0), சஹா (5), புவனேஷ்வர் குமார் (1) ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இருப்பினும், கடைசி ஓவரில் ஆல்ரவுண்டர் ரஷித் கான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை அடித்தார். இதனால், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது.
8 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களுடன் ரஷித் கான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் வருண் ஆரோன், ஜெய்தேவ் உனாத்கட், ஓஷேனே தாமஸ், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.