ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலானப் போட்டி நடைபெற்று வருகிறது. தோனிக்கு முதுகுவலி காரணமாக ஓய்வளிக்கப்பட்ட நிலையில், சென்னை அணி கேப்டனாக ரெய்னா களமிறங்கினார். இதனையடுத்து, டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ரெய்னா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன் - டூ ப்ளஸுஸ் இணை களமிறங்கியது.
முதலில் நிதானமாக ஆடிய இந்த இணை போக போக விரைவாக ரன்களை சேர்த்தது. டூ ப்ளஸிஸ் அதிரடியை ஆரம்பிக்க, ரன்கள் வேகமாக உயரத் தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில், வாட்சன் 31 ரன்களுடன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய டூ ப்ளஸிஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் ரெய்னா - ராயுடு இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பதம் பார்க்கும் என எதிர்பார்த்த நிலையில், ரெய்னா 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஜாதவ் 1 ரன்னிலும், தோனிக்கு பதிலாக களமிறங்கிய பில்லிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறியதால் சென்னை அணியின் ஸ்கோர் உயர்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது.
16 ஓவர்களில் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சென்னை அணி எடுத்திருந்தது. ராயுடு - ஜடேஜா களத்திலிருக்க, இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய 18ஆவது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. அடுத்த ஓவரை சந்தீப் ஷர்மா வீச, அதில் 8 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது. ராயுடு 25 ரன்களும், ஜடேஜா 10 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.