இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணியை பேட்டிங் ஆடப் பணித்தார்.
பின்னர் தொடக்க வீரர்களாக பார்த்திவ் படேல் - கேப்டன் கோலி இணை களமிறங்கியது. தொடக்க ஓவரிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை கொல்கத்தா பந்துவீச்சை ஒரு கை பார்த்தது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன்களை சேர்த்த நிலையில், பார்த்திவ் படேல் 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் கேட்பன் கோலி - டி வில்லியர்ஸ் இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை கொல்கத்தா அணியின் பந்துவீச்சை மைதனம் முழுவதும் பறக்கவிட்டது. முக்கியமாக கேப்டன் கோலி ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே மிகுந்த கட்டுபாடுடன் ஆடினார். ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், கவர் ட்ரைவ் என பெங்களூரு அணிக்காக இந்த தொடரின் சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.
விராட் கோலி 31 பந்துகளில் அரைசதம் கடக்க, தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு முனையில் கோலி துவம்சம் செய்ய, மறுமுனையில் டி வில்லியர்ஸ் 28 பந்துகளில் அரைசதம் கடந்து கொல்கத்தா அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர்.
ஃபெர்குசன் வீசிய 17-வது ஓவரில், இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மார்கஸ் ஸ்டோனிஸ் களமிறங்கினார்.
பின்னர் சுனில் நரைன் ஓவரில் டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார். கடைசி ஓவரில் 18 ரன்களை எடுக்க, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கோலி 82 ரன்களும், டி வில்லியர்ஸ் 63 ரன்களும் எடுத்தனர்.