ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன. காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் கேப்டனாக பொல்லார்டு செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. ரோஹித்திற்கு பதிலாக சித்தேஷ் லேடிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஓப்பனர்களான களமிறங்கிய கெய்ல் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அமர்களப்படுத்தினர்.

அதிரடிக்கு பெயர்போன கெய்ல் வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழையை பொழிய, பஞ்சாப் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. கெய்ல் வெறும் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த மில்லர் 7, கருண் நாயர் 5, சாம் குர்ரான் 8 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப பஞ்சாப் அணி சற்று பின்னடைவை சந்தித்தது. எனினும் மறுபுறம் நிலையாக ஆடிய கே.எல்.ராகுல், இறுதி வரை ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 100 (6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்தார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது.
மும்பை பந்துவீச்சில் பாண்டியா 2 விக்கெட்டையும், பெஹ்ரண்டாஃப், பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.