ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைவது உறுதியாகிவிட்டது.
இந்த மகிழ்ச்சியை சென்னை அணியின் ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வரும் நிலையில், அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளாரான ஹர்பஜன் சிங்கும் தன் பங்கிற்கு ட்விட்டரில் தனது வழக்கமான தமிழ்ப் பதிவு மூலமாக ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.
ஹர்பஜன் செய்த அந்த பதிவில், கேஜிஎஃப் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு டயலாக்கை, சென்னை அணிக்கு ஏற்றவாறு மாற்றி பதிவிட்டிருந்தார். இறுதியில் 'யாரு படம் ஓடுனாலும் ஹீரோ நாங்க தான்' என்று அஜித்தின் வீரம் படத்தில் இடம்பெற்றிருந்த பாட்டின் வரியையும் இணைத்திருந்தார்.
அவர் செய்த பதிவு,
"ஐபிஎல் ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு. அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு. ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே சிஎஸ்கேனு ஒரு டீம் இன்னைக்கு பிளேஆப்-ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம். ஐபிஎல்-ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ".
கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை அணிக்காக வாங்கப்பட்ட ஹர்பஜன் சிங், இந்த மஞ்சள் சட்டையை அணிந்ததில் இருந்து அவர் ஒரு தமிழனாகவே மாறிவிட்டார் என்றே கூறலாம். ஏனெனில், அவர் அப்போதில் இருந்து தொடர்ந்து தமிழில் ட்வீட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அது தவிர, தமிழ் மக்களின் சில முக்கியமான போராட்டங்களில் ஈடுபடும் போதும் அவர்களுக்கு ஆதரவு அளித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு பச்சைத் தமிழனாகவே இடம்பிடித்து உள்ளார் டர்பனேட்டர் என்றழைக்கப்படும் ஹர்பஜன்சிங்.