ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி மாலை டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழக்கம்போல் டாஸ் போடப்பட்டது.
அப்போது டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் டாஸில் வெற்றி பெற்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் அவரிடம் போட்டி வர்ணணையாளர் அன்ஜும் சோப்ரா பேசிக் கொண்டிருந்தார். இதே வேளையில் டாஸில் தோற்ற ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி, மைதானத்தில் ஓரத்தில் அமர்ந்திருக்கும் தனது அணியினரை நோக்கி தனது கைகளில் உள்ள 9 விரல்களை காட்டியதோடு ஏதோ பெரிய சாதனை செய்தது போன்றும் செய்கை செய்தார்.
இதன்மூலம், தான் இந்த ஐபிஎல் தொடரில் ஒன்பது போட்டிகளில் டாஸில் தோற்றதாக அவர் தெரிவித்துள்ளார். கோலியின் இந்த செய்கையை கண்ட அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் கோலியின் குறும்புத்தனத்தை பற்றி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
இப்போட்டியில், முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்திய டெல்லி அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.