இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத்-மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார், மும்பை அணியை பேட்டிங் ஆடப் பணித்தார். முதலாவதாக பேட்டிங் ஆடிய மும்பை அணி, பொல்லார்ட் அதிரடியில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்தது.
பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணிக்கு வார்னர்-பெயர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்த நிலையில், பெய்ர்ஸ்டோவ் 16 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் 15 ரன்களில் ஜோசப் பந்தில் போல்டாகி அதிர்ச்சியளித்தனர்.
தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் கூடாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மனிஷ் பாண்டே - தீப ஹூடா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நான்காவது விக்கெட்டுக்கு 19 ரன்கள் சேர்த்த நிலையில், பாண்டே 16 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து யூசஃப் பதான் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினார்.
12 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பின்னர் ஹூடா - முகமது நபி இணை மும்பை அணியின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டு நிதானமாக ரன்களை குவித்தது. ஹைதராபாத் அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
அல்ஸாரி ஜோசப் வீசிய அடுத்த ஓவரில், ஹூடா 20 ரன்களிலும், ரஷீத் கான் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மும்பை ரசிகர்கள் குஷியாயினர். பின்னர், பும்ரா வீசிய 17-வது ஓவரில் நபி ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமார் போல்டாக, அடுத்த இரண்டு பந்துகளில் கவுல் டக் அவுட் ஆனார். ஹைதராபாத் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது.